Friday, 29 November 2013

பட்டு போல் பளபளப்பான கூந்தல்.... .


முடி உதிர்தல், இப்போது ஏராளமான பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் விதமாக அறிமுகமாகி இருக்கிறது, மீஸோதெரபி. இது பிரான்ஸ் நாட்டு அழகு சிகிச்சை முறையாகும். இந்த தெரபி மூலம் முடிஉதிர்வது தடுக்கப்படும்.

மண்டையோடு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியையும் துரிதப்படுத்தும் என்கிறார்கள். டி.டி.எச். என்ற ஹார்மோனின் பற்றாக்குறைதான் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. மீஸோதெரபி செய்வது மூலம் இந்த ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கும்.

இது முடி பலப்படவும், வளரவும் துணை புரிகிறது. மீஸோதெரபி மண்டையோட்டில் உள்ள சரும அடுக்குக்கு வைட்டமின் ஈ, ஏ, அமினோ அமிலம், சில தாது சத்துக்களை அளிக்கிறது. மருத்துவகுணமும் இந்த தெரபியில் இருக்கிறது. இந்த தெரபி ஊசியை பயன்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் வலிக்காது.

ஊசியால் குத்துவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இந்த தெரபியை 8 முதல் 10 தடவை செய்துகொள்ளவேண்டும். முதலில் வாரத்தில் ஒரு தடவை என்று ஆரம்பித்து, பின்பு மாதத்தில் ஒருமுறை என்று ஆக்குவார்கள்.

தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குமேல் உதிர்ந்தால் உடனே கவனிக்கவேண்டும். கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் தங்களது அன்றாட உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடவேண்டும்.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். கீரை மற்றும் மாமிச உணவுகளையும் சாப்பிடலாம். வைட்டமின் சி, சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். பப்பாளி, எலுமிச்சை, ஸ்டாபெர்ரி, காலிபிளவர், கொய்யா, ப்ராக்கோலி போன்றவைகளில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது.

அதனால் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலில் ஜீரண சக்தி நன்றாக இருக்கவேண்டும். சத்துணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தேவையான அளவில் அவைகளை உட்கொள்ளவும் வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே சில சுய சிகிச்சைகளை செய்வதும் கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியும். பூண்டு, பெரிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருந்து சாறு எடுத்து அதனை மண்டையோட்டில் பூசவேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த சாறை பூசிக்கொள்கிறவர்கள், முதல் நாள் இரவில் பூசி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலையை கழுவி குளித்திடவேண்டும். ‘கிரீன் டீ’ யில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கிரீன் டீயை இளம் சூட்டில் தலையில் தேய்த்து, பிடித்து மசாஜ் செய்யவேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து கழுவவேண்டும். கூந்தல் நன்றாக வளர்ந்து, பட்டுப்போகாமல் அடர்த்தியாக இருக்க, மனநிலை அமைதியாக இருக்கவேண்டும். பரபரப்பாக வாழ்க்கையை உருவாக்கி, மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொண்டால் கூந்தல் அதிகமாக உதிரும். அதுமட்டுமின்றி போதுமான அளவில் இரவு நேரத்தில் தூங்கவேண்டும். தண்ணீரும் தேவைக்கு பருகவேண்டும்

No comments:

Post a Comment